Wednesday, August 22, 2012

Oh! Fish


ஏராளமான முட்கள்  வாயைச் சுற்றி. 

சில  முட்களில்  தூண்டிலிட்டவனின்
கலர் நூலும் உண்டு,
பாடமும் படிப்பித்தவனும் 
ஞாபகம் வைத்துக் கொள்ள  வசதியாய்.

பல முட்கள் 
எங்கே எப்படி மாட்டியவை 
என்று தெரியாது.

நூலும் இல்லை. 
தூண்டிலிட்டவனும் இல்லை. 
முட்கள் மட்டும் மிச்சம்.

நிதம் தோறும்  முட்கள்  தரும்  
ரண  வேதனை.

ஆயினும் அடுத்த வேளை 
பசியில் அற்ப மீனின் மூளைக்கு  
எட்டுவதில்லை 
முள்  மாட்டிய புழுவைக் கடிக்க கூடாதென்ற அனுபவம்.

பசிப்பிணி தீர்க்கும் போராட்டத்தில் 
வாயினால் ஊனுக்கு ஊணும்
ஊறும்  வருவிப்பது 
ஊழ் வினைப் பயனே என உரைப்பேன்.

Sunday, August 05, 2012

பிரயாணம் -- short story


ஙண ஙண ஙண ஙண ஙண ஙண என மானிட்டர்களின் அலாரம் அலறித் தள்ளிக் கொண்டிருந்த போது முருகன் icu வின் பிரக்ஞையற்று  இருந்தார்.
-----
காது கப்பென அடைத்து ஒரு மாதிரி நெஞ்சில் குளிர்ந்த நீரின் அழுத்தமும், மூச்சு நெடுநேரம் அடக்கியதின் எரிச்சலும் சேர்ந்து பேரவஸ்தையாய் இருந்தது. சிரமப்பட்டு சற்றே கண் திறந்து பார்த்த போது நீச்சல் குளத்தின் விளிம்பில் யாரோ நிற்பது தெரிந்தது. தண்ணீரின் அழுத்தம் ஒரே உந்தில் மேலே வரை தள்ளி விட்டது. 

கரையோரத்தில் ஒயிட் &ஒயிட்டில் பளிச்சென்று சந்தனகீற்றும் குங்குமமுமாய் புது ஆள் நின்று கொண்டிருந்தான். செக்கரட்டரி சிவராஜனைக் கேட்க வேண்டும், டிரைவர் எப்போது மாற்றினான் என்று.

"அய்யா, கிளம்பலாங்களா? நேரம் ரொம்ப ஆச்சுங்க. அற்புதமா நீஞ்சறீங்கய்யா"
பளீரென்ற ஒரிஜினல் பல் சிரிப்பில், ஓவராய் பேசறானோ என்று மனதில் எழுந்த கமெண்ட் அமுங்கிப் போனது.

மெளனமாய் உடை மாற்றிக் கொள்ளும் போது கேட்கத் தோன்றியது. வார்த்தை மட்டும் வரவில்லை. தொண்டை அடைத்தது. குளோரினா, நேற்றைய ராத்திரி ஸ்காட்ச்-ஆன் -தி-ராக்ஸா?

பேச முற்பட்ட போது எரிந்தது. செருமி செருமி ஒரு போராட்டத்துக்குப் பின், "என்ன வண்டி எடுதாந்துருக்க?"

"பளசுதான்யா. சர்வீஸ் விட்டு எடுத்தப்புறம் சல்லுனு போவுதுங்க"

காது, மூக்கு அடைப்பு மட்டும் போகவில்லை. 

ஞாயிற்றுக்கிழமை காலையில் தன்னந்தனியே ஒரு ஹைடெக் நீச்சல் குளத்தில் நீண்ட நீச்சலுக்குரிய வசதி வாய்ப்பும், சம்பாதித்த சுகவாழ்க்கை குறித்த ஒரு மெல்லிய சந்தோஷம் இருந்தது.

"எப்போ எடுப்பாங்க?"

"தெரியலீங்கய்யா. மதியம் எப்படியும் மூத்த தம்பி கணேசு வந்திருவாக. அப்புறமேல்ட்டு எடுப்பாகனு நினைக்கேன்"

"போய் சேர எத்தினி நேரம் ஆவும்பா?"

"இன்னக்கி லீவ் நாள்னால சீக்கிரமே போயிரலாங்க"

டாக்டர். தர்மராஜ் தனது படை பரிவாரங்களுடன் முருகனை முற்றுகையிட்டார். டியூட்டி நர்ஸ் மகா டென்ஷனுடன் டாக்டருக்கு கேஸ் விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"இன்னிக்கி காலைல வரை நல்லா தான் இருந்தார் சார். ஜெனரல் வார்டிக்கு மாற்றம் பண்ணலாம்னு கூட சித்ரா மேடம் சொல்லிட்டு இருந்தாங்க"

டாக்டர் தர்மராஜ் ஒரு ஹிட்லர். அவருடைய கண்டிப்புக்கும், தொழிலுக்கு கொடுக்கும் மரியாதைக்குமே அந்த ஆஸ்பத்திரிக்கு தனியாக கூட்டம் தேடித் தந்தது.
"எந்த சித்ரா?" உறுமினார். ஜூனியர் டாக்டர் நர்ஸுக்கு கண்ஜாடை காட்டினார் "சும்மா இரு"
நர்ஸுக்கு வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும்.
"சி.. சித்... சித்ரா குப்தா. பெங்களூரிலிருந்து புதுசா டிரைய்னிங் முடிச்சு வந்து இருக்காங்கள்ள...."

தர்மராஜ் அதை கவனித்த மாதிரி தெரியவில்லை. மகா மும்முரமாய் உத்திரவு போட்டுக் கொண்டிருந்தார். ஜூனியர்கள் பறந்து கொண்டிருந்தனர். களேபரமாய் இருந்தது.

முருகன், சினிமாவில் அசிஸ்டண்டாய் ஆரம்பித்து, டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர் என்று முன்னேறி, தகுந்த சமயத்தில் ஜாதி பலத்துடன் அரசியலில் புகுந்து எம்.பி, மந்திரி என்று உயர்ந்தவர். முதல்வருக்கு வலது இடது கை. எதிர் கட்சியனரும் பயப்படும் அளவுக்கு செல்வாக்கு. 

அடுத்த தேர்தலுக்கு மும்முரமாய் சுற்றிக்கொண்டிருந்த போது, இந்த சின்ன ஊரின் அருகே ஒரு சாலை விபத்தில் மாட்டிக் கொண்டு 10 நாள் முன்பு பலத்த அடியுடன் தர்மராஜின் மருத்துவமனையில் icuவுக்கு வந்து சேர்ந்தார்.

இப்போது அவருக்கும், ஆஸ்பத்திரிக்கும் தருமசங்கடம்.
 முருகனைத் தேடி வரும் கட்சிப் பிரமுகர்கள், ஒரு பக்கம். "தலைவருக்கு ஏதாவது ஆச்சின்னா.." என்று மிரட்டிப் போகும் கைத்தடிகள், மறுபக்கம். 
தலைநகரிலிருந்து ஓயாமல் வந்து கொண்டிருக்கும் தொலைபேசி அழைப்புகள்... மேற்பார்வைக்கு வந்து சேர்ந்த பல டாக்டர்களின் கேள்விகள், குடைச்சல்கள். கூட்டம். கூட்டம். டாக்டர் தர்மராஜ் தூக்கம் தொலைத்து 3 நாள் ஆச்சு. 
--- 
புது டிரைவர் திறமைசாலிதான். வேகம் போவதே தெரியாத வண்ணம் பறந்து கொண்டிருந்தான். நீச்சலின் அசதியில் தூக்கம் தாலாட்டியது. டிரைவருக்கு ஏதோ மொபைலில் கால் வந்தது தெரிந்தது. சன்னமான குரலில் ஸ்டைலாக மொபைலை கழுத்துக்கும் தாடைக்கும் இடையே குடுத்து பேசிக் கொண்டிருந்தான்.
எந்த கேள்பிரண்டோ ?
---
மிக அருகே தர்மராஜின் மூச்சு சப்தம் கேட்டது. எல்லோரும் இடித்து தள்ளிக் கொண்டு ஓடும் சப்தம் கேட்டது. உடம்பு தூக்கி வாரிப் போட்டது.. யாரோ காலை அழுத்திப் பிடித்தது தெரிந்தது. சரக்கென்று மார்பில் இன்ஜெக்ஷன் குத்தினர். ஆக்சிஜன் ஆக்சிஜன் என்று யாரொ கத்திக் கொண்டு இருந்தனர். 

உடம்பின் சகல பாகத்திலும் வலி திருகித் திருகி வலிக்க, யாரோ ஒரு டாக்டர் கடவுளே கடவுளே என்று கதறியது கேட்டது. முருகன் கண்களில் நீர் தன்னிச்சையாக கொட்ட, வாய் கோணிப் போய், கை கால் உதறிப் போட்டுக் கொண்டிருந்த பிராணவஸ்தை நேரத்தின் ஒரு கணத்தில், சரேலென எழுந்தார். ஆஆஆஆஆஆ.......................
---
"அய்யா பார்த்துங்க. தலை இடிக்கப் போவுது. பைய அப்படியே உக்காருங்க. இனிமே பிரச்சனை இல்லீங்க. விரசா போயிரலாமுங்க. அல்லாரையும் இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்பீக "

தலை சுற்றியது. முருகன் தலையை தூக்கி பார்த்தார். 

வண்டியின் ஜன்னலுக்கு வெகு கீழே மேகங்கள் வெய்யிலில் மின்னின. பூமியின் நீலவளைவும், அதற்கு மேல் தொலை தூர நட்சத்திரங்களும் .. இது வரை பார்த்தேயிராத காட்சி, அல்லது நெடுநாளுக்கு முன் பார்த்தது?..