Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Wednesday, September 17, 2014

urban buffaloes

மாநகர  எருமைகள்

இயர்போனால்  காதடைத்து
புறச்சூழல் பிரக்ஞை அற்று
முற்றும்  துறந்தவை  போல்
மோன  நிலையில்
தலையாட்டலுடன்

மாநகர  எருமை
அதும்போக்கில்
தெருவை  அடைத்துக்
கடக்குது ..


தலை  தொங்கப்போட்டு
செல்போன்  திரையில்
விரல் விளையாட்டு

நடுத்தெருவொ,
விரைவு  ரயிலடியோ ..
மாநகர  எருமைகளுக்கு
சமூக  வலைதளங்களில்
அடுத்த  கணம்
உலகம்
முடியும்  முன்
லைக்கும் ஷாரும்
வாங்கணும் ..

விரையும்  வாகனங்கள்
விலகிச்  செல்லும்
வசை மொழிகள்
ஆரன் வழியே
வழிய  விட்டு ..

மாநகர  எருமைகளே!
கூகிள்  கிளாஸ்  ஒன்று
வருதாம் .

மேற்  குத்திய  விழிகளுடன்
ok google என்றியம்பி
இரு  கால்  எருமைகள்
தலைகுப்புற  விழும்  முன் ..

அய்யா  கூகுளே !
சற்றே  அவதானியுங்கள்.

உடைந்த முன்பல்லும்
நசுங்கிய  பிட்டமுடன்
எருமைகள்  அவதரிக்கும்  முன்
சாலை  கடக்கும்  app
ஒன்றும்
விரைவில் கொண்டு  வாரும் .. 

Wednesday, August 13, 2014

பாரத கனா

பாரத கனா

வளைகோல் வலுவிழந்து
ஒரு குளிர்கால  இரவின்
உஷ்ணத்திற்கு உணவானது.

புயலென ஓடிய காலணிகள்
தேய்ந்து தூக்கி
எறிந்தாயிற்று!

ஆட்டத்தில்
 குடம் குடமாய்
வியர்வை உறிஞ்சிய
ஆடைகள் இற்றுப் போயின!

தேசிய விளையாட்டில்
சாதனைகள் பல படைத்த
தாத்தா தூசுப்
போர்வையின் பின்
கிரிக்கட்டு  விளையாடும்
குழந்தைகளை
இமைக்காது பார்க்கிறார்

மெதுவே
காற்றில் ஆடி ஆடி
மிதந்து வந்து
தாத்தா மேல் அமர்கிறது
ஒரு பழுத்த  ஆலிலை.

Monday, January 13, 2014

லௌகீகனின் காலை

இரவின் மெல்லிய குளிர்
மிச்சம் இருக்கும் அதிகாலை.

ஊர் விழிக்காத அமைதியில்
டிவிட்டிர் டிவிட்டிர் என்று
எங்கோ ஒரு பெயரில்லாத பறவை.

நேரம் நின்று போய்
வார்த்தையில் சிக்காத
பரவசம் தரும் சூரிய உதயம்.

மேகங்கள் அற்ற விரிவானம்
வெண்வாலால் இரண்டாக்கும்
உயரே ஒரு விமானம்.

இவ்வாறாய் கவிதை
படைக்க ஆரம்பித்த தினம்,
மற்றும் ஒரு லௌகீகனின்
தினமாய்
விரைந்து கடந்திருக்கும்.

ஒவ்வொரு நொடியாய்
உயிர் மெழுகுவர்த்தி
உருகி
உடல் கண்காணாமல்
கரைந்து  போகும்
நிஜம் உணர்ந்த 
விதிர்விதிர்ப்பில்,

லௌகீகனின்  மரணமும்
விதி வெல்ல விழையும் போராளியின்
பிறப்பும் ஒரு சேர நிகழ்ந்தது.

Monday, August 12, 2013

அம்மா@அலுவலகம்

ஆயாவின்
செல்போனில்
முதன்முறையாக
அம்மாவை
அழைக்கும் குழந்தை.

thanks for calling ..so and so
ஹலோ அம்மா!

the number you have dialled is busy. please hold or try again later
ஹலோ அம்மா!

neevu dial maaditha chandhadhaararu....
ஹலோ அம்மா

பல்வேறு குரல் பெண்கள்
புரியாத மொழிகளில்
எல்லாரும் அம்மாவைப்போல
ஆனாலும் அம்மாவாக இல்லாது ..

அம்மா....
அம்மா எங்கே போனே?

கண்ணீருடன்
அம்மா நினைவில்
அரற்றுகிறது
காற்றலை வழியாக
அம்மாவைத்
தேடும் குழந்தை.. 

Friday, June 28, 2013

மேகம் போல நினைவுகள்

மேகம் போல நினைவுகள்
காலத்தால் மங்கி
இப்போவே
கரைந்து போவது போல்.

சில மேகங்கள்
வெகு தெளிவாக ..
நினைமாந்தர்
வாசனையும், குரல்களும்
வார்த்தைகளும், உணர்ச்சிகளின்
கலவையாக.

கடந்த கால நினைவுகள்
நிகழ்நிஜம் போல
மீண்டும் சிருஷ்டிப்பதும்
மேகங்களைத் தொட்டுப்
பிடிக்க முயல்வது போல
நிராசையாகவே முடிகிறது.

காலத்தால் மிருதுவாகி
மறைந்து காணாமல் போனவையும்
தினம் தினம் மங்கி மறையும்
நினைவு மேகங்களை எண்ணி(?)
யாரும் அழுவதில்லை.

ஏனெனில் அவரவர் வானம்  மிகப் பெரிசு.

புதுசு புதுசாக மேகங்களும்
அவ்வப்போது  இடி, மின்னலும்
நித்தம் ஒரு வானவில்லும் தந்து
வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்திக் கொண்டே
இருக்கிறது
என் வானில்
என்றும் மறையாத
அனுபவ சூரியன்.

Monday, June 03, 2013

போதி மரம்

மெல்லிய
குளிர் வருடும்
அதிகாலை.

பூங்காவில்
பெயர் தெரியாத மரம்.
ஆனால், வாசம் மட்டும்
முப்பதடி பரப்பும்.

வெண்ணிற ஊதுகுழல்
நறுமண பூக்கள்,
கொட்டிக் கிடக்கும்
மரத்தடியிலும் பாதையிலும்
யாருக்காக?
இவ்வளவு?

பாதையின் அழுக்கிலும்
ஈரத்தில் மக்கி மறைந்தாலும்
வாசம் மட்டும் எஞ்சும்.
கெட்டாலும் மேன்மக்கள்...?

பூக்கள் ஆயுள்
மலர்ந்த பின்
ஒரு நாளோ இரு நாளோ?

ஆயினும் தினம் தினம்
மலர் சொரியும்.
பாதைக்கும்
மரம் கீழ் நிற்போர்/நடப்போர் மீதும் -
கோவில் தொடாத பூக்கள்.
கடவுள் தேடாத பூக்கள்.

பூ மேலே
 விழுந்ததும்
எச்சமோ என்ற அதிர்ச்சியில்
அவசரமாய் திட்டிவிட்டு
மரத்தடி விட்டு விலகுவோர்
வாடிக்கை / வேடிக்கை.
மரம் தென்றலின் தாலாட்டலில்
வாசம் வெகுதூரம் பரப்பி
மேலும் பூச்சொரியும்.

பூங்காவின் எந்த
அடையாளமுமற்று
இந்த கவிதையும்
மறைபொருள் கருத்தும்
கொடுத்த இந்த
பெயரில்லாத மரம்
எனக்கு
போதி மரம்.

Monday, May 27, 2013

காதல்=கடவுள்


காதல்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் வலைத் தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பென்று
துடித்துக் கொண்டிருப்பது
மட்டும்
நீ விட்டுச் சென்ற இதயம்.

கடவுள்

புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.

விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..

பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.

தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் மனத்  தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.

உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பெ சிவமென்று
துடித்துக் கொண்டிருக்க,
நீர் விட்டுச் சென்ற இதயம்.

Sunday, May 12, 2013

இதயம் மட்டும் இங்கே துடிக்கிறது!


ரயிலில் பயணிக்கும் குடும்பம்.
வெயில் கால விடுமுறைக்கு.
4 மாதம் முன்னால் பதிவு
செய்த குளிரூட்டப்பட்ட இருக்கைகள்.

பெட்டியின் ஜன்னல் ஓரம்
கம்பியில் முகம் புதைத்து
கைப் பிடித்து
கண்களோடு கண்கள்
கலந்து
கலங்கி
சொல்ல நினைத்தவை
வார்த்தை வராது
கைப்பிடியின் இறுக்கத்தில்
ஒரு வாழ் நாளின்
அன்பைப் பரிமாறி 
மெதுவே 
நகரும் ரயிலுடன்
நகர்ந்து கண் மறையும்
வரை
கை அசைத்து...

ஏசி 2 டயரில்
இப்படி எதுவும் நடக்கவில்லை! :(

கருப்புக் கண்ணாடியின்
அந்த பக்கம் அவளும்
இந்தப் பக்கம் நானுமாய்
மொத்தமாய்
மறைந்து, பிரிந்து
பேச முடியாமல், பார்க்க முடியாமல்
சொல்லாது விட்ட
ஏராளமான கவிதைகள் 
ஏந்தி
இதயம் மட்டும்
இங்கே துடிக்கிறது.

Tuesday, March 12, 2013

adukku maadi kudiyiruppu


அடுக்கு மாடி குடியிருப்பு

தாழிட்ட கதவு
திரைச் சீலையிட்டு
மூடி வைத்த ஜன்னல்கள்
world class premium
அடுக்கு மாடி குடியிருப்பு.

மூடி வைத்த வாழ்க்கையின்
புழுக்கத்தில் அழும் குழந்தைகள்.
வெய்யில் காயவும்
தென்றலுக்காகவும்.

குடியிருப்பில் குழந்தைகள்
விழி விரிய, 
பயமூட்டி, பயம் காட்டி
பூச்சாண்டி கதை பல சொல்லி வளர்க்கின்றார்.

ஆயினும் குழந்தைகள் சொல்லித் தராது கற்றவை
அடுத்த வீட்டு ஆதிசேஷனை  நம்பாதே 
அயல் நாட்டு ஆடோமேஷனை மட்டும் நம்பு. 
சப்பை மூக்கு மனிதருக்கு சப்பை மூக்கு நாயே மேல். 

ஆதரிக்க அயலாரின்றி 
அனாதையாய் 
அமெரிக்கன் மகள் /மகன் வரும் வரை 
ஐஸ் போட்டியில் காத்திருக்கிறார் 
என பத்திரிக்கைகள்  எழுதும். 

ஆனாலும் என்ன?
அடுத்த உலகத்திற்கு 
நான் கொண்டு செல்வேன் 
எல்லாமும், காதற்ற ஊசியும்* 
என எண்ணி எண்ணி 
அடுக்கி வைக்கிறார் 
ஏராளமான செல்வம். 

வாசலில் புன்னகையுடன் 
காத்திருப்போர் 
குழந்தைகளுக்காக கடவுளும் 
பெரியவர்களுக்காக யமனும். 

Thursday, January 31, 2013

ஜனவரி இருபத்தாறு


"எவ்ளோ தம்பி?"
"முப்பது ரூபா ."
"இல்ல ரொம்ப ஜாஸ்தி சொல்றே."
"பதினைஞ்சுக்கு கொடு."
"இல்ல சார் கட்டாது. இருபத்தி அஞ்சு கொடு சார். எனக்கு இதுல மூணு ரூவா தான் கிடைக்கும்."
"இதுக்கா இருபத்தி அஞ்சு? முடியவே முடியாது. சிக்னல் விழ போவுது பாரு. இருபது வெச்சிக்க."
(தயங்கி, யோசித்து) "சரி சார். இருபது கொடுங்க."
இப்படி அடித்துப் பேரம் பேசி, பெருமையுடன் வாங்கியது 
காரில் ஒட்டி வைக்க.
பிளாஸ்டிக் கொடி கம்பத்தில் மூவர்ண கொடி.  

Thursday, January 17, 2013

Time



சத்தியமா சொல்றேன் 
ஒரே வருடத்தில் 
உத்திரவாதமாக 
இளைத்து சிலிம் ஆவது  
தினசரி காலண்டர் மட்டுமே!
----

மற்றும் ஒரு நாள் 
மரணத்தை நோக்கி 
சர்வ நிச்சயமாய்!
---
வருடங்கள் உருண்டோடும் 
year of birth selectionனில் 
வாழ்க்கை  கழிந்ததென்னவொ 
நொடி நொடியாகத்தான்.

Wednesday, August 22, 2012

Oh! Fish


ஏராளமான முட்கள்  வாயைச் சுற்றி. 

சில  முட்களில்  தூண்டிலிட்டவனின்
கலர் நூலும் உண்டு,
பாடமும் படிப்பித்தவனும் 
ஞாபகம் வைத்துக் கொள்ள  வசதியாய்.

பல முட்கள் 
எங்கே எப்படி மாட்டியவை 
என்று தெரியாது.

நூலும் இல்லை. 
தூண்டிலிட்டவனும் இல்லை. 
முட்கள் மட்டும் மிச்சம்.

நிதம் தோறும்  முட்கள்  தரும்  
ரண  வேதனை.

ஆயினும் அடுத்த வேளை 
பசியில் அற்ப மீனின் மூளைக்கு  
எட்டுவதில்லை 
முள்  மாட்டிய புழுவைக் கடிக்க கூடாதென்ற அனுபவம்.

பசிப்பிணி தீர்க்கும் போராட்டத்தில் 
வாயினால் ஊனுக்கு ஊணும்
ஊறும்  வருவிப்பது 
ஊழ் வினைப் பயனே என உரைப்பேன்.

Sunday, January 22, 2012

puridhal


புரிதல் 

கதவு கல கலத்தது, சிரித்தது. 
ஒருக்களித்த வாசல் கதவில் 
வளை ஒலி.
சீலையிட்ட ஜன்னல் சொல்லியது
"இல்லை. வேறு வீடு பார்."

வெய்யில் கண்ணாடி உரையிட்ட கார் கதவின்
முன் கை ஏந்தலுக்கு மகா மௌனம் பதிலாக.

குட்டி திரையில் குறுஞ்செய்தியில்   
தினத்தின் தலை எழுத்து 
மாற்றும் அவசர உத்தரவுகள்..

கணினி ஜன்னல்களில் வயிற்றுப்பிழைப்பு.

வீடு திரும்பினால் 
கார்டூன்களாய் திரை முன்னால்
கரையும் குழந்தை பிராயம் .. 

இவ்விடம் முகம் பார்த்தும் 
மனம் புரிவதில்லை 

நாளின் இறுதியில் 
வளைவுகளுடன் 
விசும்பும் போர்வை - 
அரை குறை புரிதலின், இயலாமை.

Monday, August 15, 2011

தலை மேல் தண்டவாளங்கள்

தடங்களில் செல்லும் நினைவு ரயில்கள்.
அதே பாதை ; அதே நினைவு ரயில்கள்.

சமயத்தில் ரயிலோடவும்
சமயத்தில் ரயில் ஓடவும்
வெகு தூரத்தில்; மிகவும் தூரத்தில்.
உணர்வில் மட்டும் ரயில் புலப்படும் தூரத்தில்.

ரயிலோட்டதின் நினைவு காற்று
முகத்தில் வருடும்/ அறையும்
நினைவின் வேகம் பொறுத்து ..

நினைவுகள் ரயிலை
காலம் இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.
நினைவுகள் ரயில்
காலத்தை இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.

ரயில் மட்டும் நிற்பதில்லை

ரயில் நல்லதா ? கெட்டதா?
இருப்புப்பாதையின் இருப்பை பொறுத்து.

தலையின் கீழ் தண்டவாளம்!
ஆக்ரோஷ ரயில் தட தடத்து
துண்டித்து மேல் ஏறிச் செல்லும் போது
விதிர்த்து எழுவதும் உண்டு.
தண்டவாளம் தலை கீழ் எப்போது வந்தது?

சுற்றிப்பார்க்க
தலை கவிழ்த்து
தண்டவாளம் தொலைக்க
தெருவெங்கும் மனிதர்கள்.
தினம் தினம் துண்டிப்பின் வலியுடன்.

கேட்கிறார் வேறு
ரயில் கொண்டு
ஏறு ரயில் நிறுத்த ஏலுமோ?

உபாயம் உரைப்பீரா?

Saturday, April 10, 2010

travel

நெடுந்தூர பிரயாணம்
அதிகாலை விமானம்
கிளம்பும் போது
மனைவி கேட்டாள்
எல்லாத்தையும்
எடுத்துக்கிட்டீங்களா ?
purse  ல cash?
ticket?
tie?
blackberry?
laptop charger?
முத்தம் ஒன்னு
விட்டுடீங்களே?
எடுத்திட்டு போகலையா?
பிரயாணம் இனிதாய்
ஆரம்பம் :)

Accident

ரசிக்காத ஓவியங்கள்

வாழ்க்கைத் துடிப்பின்
இறுதி போராட்டம்
ஓவியமாய்
மாநகர சாலையில்
காவல்துறை
கைவண்ணத்தில் !

ரத்தம் ஒரே நிறம்

மனிதரில் ஆயிரம் ஜாதி
சாலை விபத்தின்
ரத்த சுவடுகள்
சொல்லும்
மரண ஜாதி
ஒரே ஜாதி

Saturday, April 03, 2010

e=mc^2

சூடு இருந்தா
தேடுறது 
செம கட்டை.

சூடு குறைஞ்சு
செத்தா
ஏத்துறது கட்டை.

சூடு போனா கட்டை
கட்டை எரிஞ்சா சூடு.

சூடு energy
கட்டை matter

e = mc^2
தொடர்பு புரியுதா 
மாமே?

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்
வாரத்தில் பத்து நிமிடம்
வாழ்வின் அனுபவம்
வார்த்தையில் வடித்தெடுத்து
கவிதை சொல்வான்
இதயம் வெல்வான்

மீதி நேரம்
கணினி திரையில்
முகம் புதைத்து
டைடலில்
தேடல் தொலைத்தவன்

அண்ணன் மன்னன்
கரு வண்ணன்
கவிக்கொரு கண்ணன்

Sunday, March 28, 2010

நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

கதவை திற
காற்று வரட்டும்.

திறந்த கதவில்
நுழைந்தது
நாடோடித் தென்றல்.

மறந்தது நிதானம்
ஜன்னல் வழியே
பறந்தது ஆனந்தம்.

first poetry written along with significant contribution from my wife bhuvana

Saturday, March 27, 2010

வயிற்றுக்கு மேல் இதயம்

இதயம் எட்டாத தொலைவில்
சிந்தனைகளின் பெட்டகம்.
சதா சிந்தனை புழுதி
செந்நிறமாக..
சுள்ளென்று ..
இதயத்தின் ஈரம்
அறவே இல்லாது..

ஆசனவாயின் மேல் பற்கள்
நர நரக்கின்றன ..
சதா சர்வகாலமும்
மூடாத வாய்கள் இருபுறமும் ..
மூத்திர வாடையுடன்
வார்த்தைகள் உதடுகளில் ..

தெறித்து விழும்
சிந்தனை சகதி
தாண்டி சென்று
படைத்தவனை கேட்கிறேன்.
படைப்பில் கோளாறா?

வயிற்றுக்கு மேல் இதயம் தந்தேன்
வயிற்றின் பசி
இதயத்தை தின்னாதிருக்க..

நீரென்ன செய்தீர்?
இதயம் சிந்தனைக்கும்
வயிற்றுக்கும்
இடையே ஏனென்று
எதிலும் சேர்க்காது
ஒளித்து வைத்தீர்.

சிந்தனை விரிந்து , பரவி
சுழன்று அடிக்க
வயிற்றில் அக்னி பெருகி
அகோர பசியுடன்
பேயாய் மாறித் தவிக்கிறீர்.

நும் இதயம் மட்டும்
தேடி எடுத்தாரும்.
மனிதம் மீட்டு தருவேன் என்றார்.