Monday, June 03, 2013

போதி மரம்

மெல்லிய
குளிர் வருடும்
அதிகாலை.

பூங்காவில்
பெயர் தெரியாத மரம்.
ஆனால், வாசம் மட்டும்
முப்பதடி பரப்பும்.

வெண்ணிற ஊதுகுழல்
நறுமண பூக்கள்,
கொட்டிக் கிடக்கும்
மரத்தடியிலும் பாதையிலும்
யாருக்காக?
இவ்வளவு?

பாதையின் அழுக்கிலும்
ஈரத்தில் மக்கி மறைந்தாலும்
வாசம் மட்டும் எஞ்சும்.
கெட்டாலும் மேன்மக்கள்...?

பூக்கள் ஆயுள்
மலர்ந்த பின்
ஒரு நாளோ இரு நாளோ?

ஆயினும் தினம் தினம்
மலர் சொரியும்.
பாதைக்கும்
மரம் கீழ் நிற்போர்/நடப்போர் மீதும் -
கோவில் தொடாத பூக்கள்.
கடவுள் தேடாத பூக்கள்.

பூ மேலே
 விழுந்ததும்
எச்சமோ என்ற அதிர்ச்சியில்
அவசரமாய் திட்டிவிட்டு
மரத்தடி விட்டு விலகுவோர்
வாடிக்கை / வேடிக்கை.
மரம் தென்றலின் தாலாட்டலில்
வாசம் வெகுதூரம் பரப்பி
மேலும் பூச்சொரியும்.

பூங்காவின் எந்த
அடையாளமுமற்று
இந்த கவிதையும்
மறைபொருள் கருத்தும்
கொடுத்த இந்த
பெயரில்லாத மரம்
எனக்கு
போதி மரம்.