கை விரல்களின் சுருக்கம்
கடந்து சென்ற
வாழ்வின் வரைபடம்.
பெரும்பாலும் சந்தோஷம்
மற்றவை
வாழ்க்கை பெரும்பாலும்
சந்தோஷமாய் கழிந்ததை நினைவுறுத்த...
நெடிய வாழ்வின் எச்சமாக
துணை வரும் தனிமை.
சொல்லிப்புரிய வைக்க
இயலாத தனிமை.
எல்லாரும் இருந்தும்
என்னுடன் என் நிழலாக ..
நாட்கள் மட்டும்
கடந்து போகும்
இதோ இதோ இன்றோ நாளையோ ...
உதறித் தள்ள வலியும் இல்லை.
பற்றி பிடித்திட பிடிப்பும் இல்லை.
விரட்டி வரும் மறதி
நினைவுகள் விழுங்காதிருக்க விழைவு.
இந்நாளின்
என் ஒரே பிரார்த்தனை.
என் நினைவுகள் மட்டுமே
என் ஒரே சொத்து.
ஆயினும் மறதி
நினைவுகள் தின்று தீர்கிறது.
பசித்து வீடு வந்த பிள்ளை போல
இன்னும் கொடு இன்னும் கொடு என்று.
தினம் நினைவுகள் மெல்ல
மறக்கின்றன..
நான் யார் என
அவ்வப்போது
நானே மறந்து போகிறேன்.
மரித்தல்
நினைவிலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆயினும்
போராடிப் போராடி மீட்டு வருவேன்
என் அடையாளம்.
இப்படியே
என் அடையாளம்
மீட்டு வரும் முயற்சியும்
ஒரு நாள் மறந்து போவேன்.
மறதி முழுதாய்
என்னைத் தின்று தீர்க்கும்.
அடையாளம் மறந்த
உயிருள்ள ஒரு மூட்டையாய்.
பிறந்த அன்று போல
மறந்த அன்றும்.
Sunday, June 20, 2010
Subscribe to:
Posts (Atom)