ஏராளமான முட்கள் வாயைச் சுற்றி.
சில முட்களில் தூண்டிலிட்டவனின்
கலர் நூலும் உண்டு,
பாடமும் படிப்பித்தவனும்
ஞாபகம் வைத்துக் கொள்ள வசதியாய்.
பல முட்கள்
எங்கே எப்படி மாட்டியவை
என்று தெரியாது.
நூலும் இல்லை.
தூண்டிலிட்டவனும் இல்லை.
முட்கள் மட்டும் மிச்சம்.
நிதம் தோறும் முட்கள் தரும்
ரண வேதனை.
ஆயினும் அடுத்த வேளை
பசியில் அற்ப மீனின் மூளைக்கு
எட்டுவதில்லை
முள் மாட்டிய புழுவைக் கடிக்க கூடாதென்ற அனுபவம்.
பசிப்பிணி தீர்க்கும் போராட்டத்தில்
வாயினால் ஊனுக்கு ஊணும்
ஊறும்
வருவிப்பது
ஊழ் வினைப் பயனே என உரைப்பேன்.