Sunday, October 31, 2010

birthday boy

"சாக்லேட் கேக் ரெண்டு கிலோ
10 நம்பர் போட்ட மெழுகு வர்த்தி
பிறந்த நாள் தொப்பிகள்
சமோசா, பெப்சி 2 லிட்டர் பாட்டில்கள்
எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோங்க"
சொல்லிவிட்டு பறந்தோடும் டெலிவரி சிறுவா
உன் பிறந்த நாள் என்று?

Thursday, October 07, 2010

சிறுகதை: காலம்

திங்கள் காலை அலுவலக ரிவியூவில் இருந்த போது அலைபேசி சிணுங்கியது..
அம்மா !! இந்நேரத்தில்??
"ஹலோ?"
"சுந்தர், உன்கிட்ட கொஞ்சம் பேசணும் .."
"அவசரமா அம்மா? .. கொஞ்சம் பிசியா இருக்கேனே .. சரி சொல்லுங்க"
"பாட்டிக்கு ... எனக்கு பயமா இருக்குடா..."
கான்பரன்ஸ் அறையை விட்டு வெளியே வந்தேன்.. "பாட்டிக்கு என்ன ஆச்சு?"
"பாட்டிக்கு ஞாபகம் சரி இல்லை.. முப்பது வருஷமா கூட இருக்கிற என்னையவே நீ யாருன்னு தெரியலை.. உன் பேர சித்த சொல்லேன்கிறா.. ரொம்ப வினோதமா நடந்துக்கறா ..
டிவி கூட எல்லாம் பேசறா. நிஜமான மனுஷாளுக்கும் டீவீல வர காட்சிக்கும் கூட வித்தியாசம் தெரியாம நடந்துக்கறா. நாமளா ஏதாவது சாப்பிட குடுத்தா தான் சாப்பிடறா.. குடிக்கிறா.. எனக்கு பயமா இருக்குடா.. எப்படி இருந்த மனுஷி .. நடமாட்டமே சுத்தமா இல்லைடா .. இப்படி ஆகணுமா? (விசும்பல் சத்தம்) உங்கப்பா வேற ஊர்ல இல்லை.. என்ன பண்ணுவேன்?"
சரி அம்மா .. அழாதே ..பாட்டிக்கிட்டே நான் பேசறேன்.. டென்சன் ஆகாதே. பாட்டிக்கு ஒன்னும் இருக்காது. நான் பேசி பார்த்திட்டு சொல்றேன். என்ன பண்ணனும்னு. பதட்டப்படாம இருமா."

மீட்டிங் முடித்துவிட்டு வீட்டை கூப்பிட்டேன்..
"அம்மா.. பாட்டிக்கிட்ட கொடு.."
"பாட்டி!! .."
"..........."
"பாட்டி?.. பேசறது கேக்கறதா?"
சிறிது மௌனத்துக்குப் பிறகு "யாரு?"
"நான்தான் பாட்டி.. சுந்தர்"
"சுந்தரா?... இப்போ எங்கே இருக்கே? எப்போ வரே?"
"பம்பாயில இருக்கேன் பாட்டி.. நவராத்ரிக்கி வரேன்.. ஹெல்த் எப்பிடி இருக்கு?"
பாட்டி குரலில் பழைய உற்சாகம்! நினைத்தேன். அம்மா தான் தேவை இல்லாமல் கலவரப்படறா.
"எனக்கு என்னடா? இந்த வயசுக்கு என்ன வியாதி வரணுமோ, அத்தனையும் வந்திருக்கு.. உங்கம்மா நல்லா தானே வெச்சிண்டிருக்கா.. அப்போ அப்போ ஞாபகம் மறந்து போய்டறது.. சாப்பிட்டேனா, மூத்திரம் போனேனா நினைப்பு இருக்கிறதில்ல.. இன்னும் எவ்ளோ நாளைக்கோ இப்டி? ..ஆர்த்தி எப்படி இருக்கா?
"நல்லா இருக்கா பாட்டி.. ராகவ்குதான் உடம்பு அடிக்கடி முடியாம போறது"
"ஒழுங்கா அவனுக்கு எண்ணை தேச்சு குளிப்பாட்ட சொல்லு.. உனக்கும் சின்ன வயசுல ரொம்ப படுத்தும்.. பாலரிஷ்டம் .. உன்னை ஒரு வழிக்கு கொண்டு வரதுக்கு நானும் அவரும் எவ்வளவு பட்டிருக்கோம் தெரியுமா? ராத்திரி எல்லாம் இருமிண்டே இருப்பே..அவர் உன்னை தோளில போட்டிண்டு நடையா நடப்பார்.. "

அலைபேசி மீண்டும் சிணுங்கியது ...பாஸ்!. "பாட்டி ராத்திரி கூப்பிடறேன். நல்லா தான் இருக்கே. அப்புறம் பேசறேன்."
"ஹலோ பாஸ். இதோ வரேன்."

திங்கள் தலைவலிகள். வேலை பிழிந்து எடுத்தது.

மதியம்தான் உரைத்தது.. அம்மாவிடம் பாட்டியிடம் பேசிய விபரம் சொல்லவில்லை. அம்மா ஒரு டென்சன் பார்ட்டி. தேவை இல்லாமல் குழப்பி கொள்கிறாள் ..

திரும்ப வீட்டை கூப்பிட்டேன் .. லயன் பிஸியாக இருந்தது. தொடர்ந்து பிசியாகவே இருந்தது. "ச்சே. அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நிப்பாட்டுவதே இல்லை"
அம்மாவை அலைபேசியில் கூப்பிட்டேன் ..
"ஹலோ?"
ரகசிய குரலில் கேட்டாள்..
"நானே கூப்பிடனும்னு நினைச்சேன்.. ரெண்டுபேரும் அப்டி என்னடா பேசறேள்?. இவ்ளோ நேரமா பாட்டி சுவாரஸ்யமா பழைய கதை எல்லாம் சொல்லிண்டு இருக்கா? உனக்கு இன்னிக்கி வேலை ஏதும் இல்லையா ?"
"!!!"