தடங்களில் செல்லும் நினைவு ரயில்கள்.
அதே பாதை ; அதே நினைவு ரயில்கள்.
சமயத்தில் ரயிலோடவும்
சமயத்தில் ரயில் ஓடவும்
வெகு தூரத்தில்; மிகவும் தூரத்தில்.
உணர்வில் மட்டும் ரயில் புலப்படும் தூரத்தில்.
ரயிலோட்டதின் நினைவு காற்று
முகத்தில் வருடும்/ அறையும்
நினைவின் வேகம் பொறுத்து ..
நினைவுகள் ரயிலை
காலம் இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.
நினைவுகள் ரயில்
காலத்தை இழுத்துச் செல்லும்
முன்னும் பின்னும்.
ரயில் மட்டும் நிற்பதில்லை
ரயில் நல்லதா ? கெட்டதா?
இருப்புப்பாதையின் இருப்பை பொறுத்து.
தலையின் கீழ் தண்டவாளம்!
ஆக்ரோஷ ரயில் தட தடத்து
துண்டித்து மேல் ஏறிச் செல்லும் போது
விதிர்த்து எழுவதும் உண்டு.
தண்டவாளம் தலை கீழ் எப்போது வந்தது?
சுற்றிப்பார்க்க
தலை கவிழ்த்து
தண்டவாளம் தொலைக்க
தெருவெங்கும் மனிதர்கள்.
தினம் தினம் துண்டிப்பின் வலியுடன்.
கேட்கிறார் வேறு
ரயில் கொண்டு
ஏறு ரயில் நிறுத்த ஏலுமோ?
உபாயம் உரைப்பீரா?
Monday, August 15, 2011
Subscribe to:
Posts (Atom)