Thursday, April 21, 2011

"Nadunisi Naigal" Movie review - "Who let the dogs out? Who? Who?

Curiosity killed the cat. ஆர்வ கோளாறு. அவ்வளவு தான். எல்லா பிலாகுகளிலும் இந்த காய்ச்சு காய்ச்சுகிற அளவுக்கு படத்தை எப்படி எடுத்து (அ) கெடுத்து இருக்கிறார் என்ற ஆர்வ கோளாறில் படம் தேடி பிடித்து தரவிறக்கம் செய்தேன் - படத்தின் அலை சுத்தமாய் ஓய்ந்து அடங்கியபின்.

இதோ ஒரு முன் எச்சரிக்கை:

௧. படத்தின் கதையை நான் எழுத போவதில்லை. ஒரு விமர்சகரின் வேலை அல்ல அது என்பது எனது அபிப்பிராயம்.
கா. இணையத்தின் முகமற்ற சுதந்திரம் கொடுத்த *** கொழுப்பில் கௌதமையோ அவரது குடும்பத்தையோ திட்ட போவதில்லை.

எனக்கு படம் பிடித்திருந்தது. நேர்த்தியான ஒளிப்பதிவு தொழில் நுட்பம். பெரும் பாலும் கதையை அமைதியாய் நகர விடும் ஒலிப்பதிவு. மொத்த கதையும் ஒரே இரவில் நடக்கிறது. எனவே நிறைய இருட்டு காட்சிகள், படத்தின் இருளான கதைக்கு (dark themed story) துணையாக. கதைக்களம் தேர்ந்தெடுத்ததில் ஒரு வித்தியாசமான முயற்சி. போல்டாக என்று கூட சொல்லலாம். இமேஜ் பாராமல் கௌதம் குதித்திருக்கிறார். ஹீரோ என்று யாரும் தனியாக கிடையாது. ஹீரோயசம் சுத்தமாக இல்லாத ஒரு கதை. வீராவாக நடித்தவருக்கு முதல் படம் என்று சொல்லும்படியாக இல்லாமல், நன்றாக தனது பாத்திரம் உணர்ந்து, உள்வாங்கி நடித்திருக்கிறார். சமீரா ரெட்டிவும் தனது பங்கை நிறைவாகவே செய்து இருக்கிறார்.

now back to the furore:

இணையத்தில் இந்த அளவுக்கு குதி குதி என குதித்து கிழித்து எறிய வேண்டிய அவசியம் இல்லாத படம். 'ஏ' சர்டிபிகேட் கொடுத்த பின்னரும் கலாசார காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இந்த ஆட்டம் ஆட வேண்டியது இல்லை. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் குத்தாட்ட அழகிகள் ஏற்படுத்தாத சலனமா ந.நி.நா. ஏற்படுத்த போகிறது?
'ஏ' சர்டிபிகேட் 18 வயது வந்தவருக்கு மட்டும் அல்ல, மனதில் முதிர்ச்சி உள்ளவர்களுக்கு மட்டும் என்றும் கொள்ளலாம்.
மனதின் முதிர்ச்சிக்கு பதினெட்டு வயது ஒரு சரியான அளவு கோல் அல்ல, இவர்களை பொறுத்தவரை.

அனேகமாக 'ஏ' சென்டரில் மட்டும் ஓடி இருக்கலாம். ஏனெனில் ஆங்கில படங்களின் பாதிப்பு ஏராளம். முக்கியமாக christopher nolan's memento. நம்ம கஜினியின் மூல கதை எடுத்த இயக்குனர். இன்னும் பல ஆங்கில படங்கள் மற்றும் நம்ம ஊர் சிகப்பு ரோஜாக்கள் - இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஞாபகப்படுத்தியபடி .

படத்தின் கடைசியில் வரும் child abuse statistics படத்தின் முதலில் காட்டி இருந்தால், ஓரளவுக்கு படம் பார்ப்பவரை prepare பண்ணி இருக்கலாம்.

குழும கூடலில் ஈடுபடும் தந்தை. மகனையும் கூட இழுத்து குழிக்குள் (no pun intended) தள்ளுகிறார். திடும் என, வாழ்வில் நாம் தவிர்க்க பார்க்கும் நினைவுகள், நடப்புகள் திரை எதிரே விரிவது, shock value உண்டாக்குகிறது. நேர் கோடாக பார்த்து, பழகி, வாழ்ந்த வாழ்கையின் இடையில், இருளாகவும், கோணலாகவும், கற்பிதங்கள் சிதைவுறும் வண்ணம் அமைந்த கதைக்களன் மனதில் ஒரு அவஸ்தையை உண்டாக்குகிறது. சில காட்சிகள் இப்படியும் நடக்குமா, நடந்திருக்குமா என பார்வையாளராய் சிந்திக்க வைக்கிறது. இயக்குனரும் அதை தானே எதிர்பார்த்திருப்பார்?

வளர்த்த கடாவே பாயில் பாய்வது மீனாட்சி கதாபாத்திரத்துக்கு அதிர்ச்சி. அவர் அதை மௌனமாய் ஏற்றுக்கொள்வது, கதாபாத்திரத்தின் புனைப்பில் உள்ள finer undercurrent emotions ஐ காட்டுகிறது.
Relationships எல்லாம் நேராக இல்லாமல் 'முன்னே பின்னே' இருக்கிற உறவுகள் சமூகத்தில் தான் எத்தனை?

மெதுமெதுவே மன நிலை பிறழும் வீரா, multi-personality disorder, சமர் தரப்பு நியாயங்களும், சமரின் நடவடிக்கைகளால் வீரா மனதை திருப்தி படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் சமாதானங்களும் சரி வர சொல்லப்படவில்லை. கதாபாத்திரங்களின் ஆழம், மற்றும் போராட்டம், அந்நியனில் சொல்லிய அளவு கூட ந.நி.நா. களில் சொல்லப்படவில்லை. குணாதிசயங்கள் மேலோட்டமாகவே சொல்லிப் போவது கதையின் வேகம் கருதி என்ற சமாதானமா, தெரியவில்லை?

இன்னது, இவ்விதம் என்று முழுவதும் சொல்லாமல் பார்வையாளர் interpretations க்கு வேண்டும் என்றே நிறைய இடங்களில் iconic reference ஆக விட்டிருக்கிறார்.(உதா) தலை முடி கேட்கும் மீனாட்சி கேரக்டர்.

இவ்விதம் இந்த படமும் கௌதம் மேனன் ஸ்டைலில், அதாவது, ஒன்றிரண்டு கதாபத்திரங்களின் மிகப் பக்கத்தில் பார்வையாளரை கொண்டு சென்று, கதையை unidimensional இல் சொல்லும் உத்தியில் உள்ளது. இதையே விசுவலாகவும், நிறைய tight closeup காட்சிகள் மூலம் காட்டுகிறார். கௌதமின் வெற்றிக்கும் (உதாரணம்: காக்க காக்க, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு) தோல்விக்கும் (உதாரணம்: வாரணம் ஆயிரம், பச்சை கிளி முத்துச்சரம்) இந்த உத்தியின் intensity யே காரணம். பார்வையாளர்கள், இயக்குனரின் மன ஓட்டத்தில் இயைந்து பார்த்தால் படம் வெற்றியாகவும் இல்லையென்றால் பெரும் தோல்வியாகவும் அமைகிறது.

மற்ற படி, இந்த படம் ஒரு ஆதர்ச கதாநாயகனின் கதை அல்ல.
எந்த ஒரு மசாலாவின் மிக்சும் இல்லை. (டூயட், குத்துப்பாட்டு, கயிறு கட்டி மேலே தூக்கி போடும் சண்டை காட்சிகள், வெளிநாட்டு படப்பிடிப்பு, வீராப்பு வசனங்கள்...)
காமெடி இல்லை

ஆதர்ச கதாநாயகன், மசாலா, காமெடி என்ற மாதிரி எதிர்பார்ப்பில் திரைப் படம் அணுகுபவர்கள் தயவு செய்து விஜய் படம் மட்டும் பார்க்கவும்.
பாலா, கௌதம், மிஷ்கின், படங்கள் அல்ல.