திருசூலம் ரயில் நிலையத்தில் அவளைப் பார்த்தேன். 4-5 சிறார்களுடன் பிளாட்போர்மில் அமர்ந்திருந்தாள். டோலக்கு, ஜல் ஜல் என தொழிலுக்கு உண்டானஉபகரணங்களுடன்.
கட். அதற்கு முன் ஒரு சிறு அறிமுகம். நான் மும்பையில் ஒரு குறும் பட இயக்குனர்.சற்று முன் வேலை விஷயமாக சென்னை வந்து சேர்ந்தேன்.
மும்பையில் தேடியும் அகப்படாத ஒரு முகம். பெரிய தேன் நிறக் கண்கள், ஒரு காந்த கவர்ச்சியுடன். மாசு மருவில்லாத வழவழா சருமம். சாம்பு போட்டு அலசி ஒரு பியூடிசியன் கையில் கொடுத்தால்.. இன் புது வரவு ரெடி!காதில் ஒரு ஈர்க்குச்சி மட்டும். கழுத்தில் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் மாலை. அழுக்கடைந்த, ரெண்டே ரெண்டு ஊக்குகளில் மானம் மறைக்கும் பிளவுசுக்கு, நேர்மாறாக பளிச்சென்ற புது நிறம், வெயிலில் வாடாத வனப்பு!
ரொம்ப வெறிக்கிறேனோ? சுற்றிலும் பார்வை படரவிட்டேன். ஓரக்கண்களாலும், ரொம்ப நேராகவும் - ஆடவர் கூட்டம் தின்று கொண்டிருந்தனர் - ஆவென..
4 - 5 குழந்தைகள் . சில அவள் ஜாடையில். கூட்டம், வெய்யில், பிரயாணிகள், வந்து செல்லும் ரயில்கள். எதுவும் உறைக்காமல் அவளது வெறித்த பார்வை .. nikon d70 க்கான நிழற்பட தருணங்கள்.
ஏலே .. லாப்டாப்பும் கையுமா வெள்ளையும் சொள்ளையுமா இப்படி சைட் அடிக்கிறியேடா? " மனசாட்சி இடித்து உரைத்தது..
ரயில் வந்து சேர, கிடைத்த கேப்பில் அருகிலுள்ள பெட்டியில் தொற்றிக்கொண்டேன். மாம்பலம் எத்தனாவது ஸ்டேசன்? ரயில் ஒரு உதறு உதறிக் கிளம்பியது.
கொய்யா, ஊக்கு, குழந்தை படக்கதை, ரயில் அட்டவணை.. என ரயில் ஒரு நடமாடும் சந்தை கடை ஆனது..அட! கூத்தாடியும் அதே கோச்சில் ஏறி இருந்தாள்.. எப்படி தான் கூட்டத்தில் 4-5 குழந்தைகளுன் ஏறினாள்?
பெரிய பையன் டோலக்கு அடிக்க, 2 சின்ன பெண் குழந்தைகள் பல்டி அடித்தன. ஒரு சிறு வளையத்தில் உடம்பை நுழைத்து வெளியே வந்தன.. நின்ற வாக்கில் ஒரு குட்டி கரணம் அடித்தால் ஒருத்தி.
கூத்தாடி சீனியர் மட்டும் நகரவில்லை.. நடை மேடை வராத கதவு பக்கம் ஒதுங்கி குந்தி இருந்தாள்..நின்று கொண்டிருந்த இளைஞர் கூட்டத்திற்கு வசதியாய் இப்போது பறவை பார்வையில் காணக் காட்சி! கண்கள் காந்தம் வைத்தாற்போல் ஒட்டி இருந்தன.இரட்டை அர்த்த கமெண்டும், சிரிப்பும், கிண்டலுமாய்..
இன்னொரு சின்ன குட்டி, சதா மூக்கு ஒழுகிக் கொண்டு, கையில் ஒரு ஸ்டீல் பாத்திரம் ஏந்தியபடி சுற்றி வந்தது. சில பிரயாணிகள் சில்லறை இட்டனர். என் பையனுக்கும் மூக்கு ரொம்ப ஒழுகுவதாக என் மனைவி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
சே! இந்த குட்டியும் என் பையன் வயசு தான் இருக்கும்ல? அவளுக்கு மிஞ்சி போனா 22-23 வயசு தான் இருக்கும். இப்போவே ஒரு 3-4 டெலிவரி பார்த்திருப்பா? நிதம் நிதம் ரயிலில் வரும் மக்களை நம்பி பிழைப்பை ஓட்டி கொண்டு.. குழந்தைக்கு நோய் நொடின்னா எங்கே போய் மருத்துவம் பார்ப்பா? வேலையை விட்டிட்டு போவாளா? இவளுக்கு யாரு பாதுகாப்பு? இப்போவே இவ்வளவு வெறிக்கிறோம்? ராத்திரியில் எப்படி நிம்மதியா விடுவாங்க? மாபியாவா? அல்லது புலம் பெயர்ந்த அவலமா?
பசியும், ஏழ்மையும், சார்ந்து இருக்கும் சமூகமே பாதுகாபில்லாமல் இருக்கும் நிலையும், வாழ்வின் நிலையற்ற தன்மையும் முகத்தில் அறைந்தன. அடியற்ற பாதாளத்தில் வீழ்வது போல ஒரு மனநிலைக்கு தள்ளியது.
சின்ன குட்டி என்னிடம் வந்து கை ஏந்தியது..ரோஸ் நிற பிஞ்சு விரல்கள். நகங்களில் அழுக்கு அடை போல ஓட்டி இருந்தது.
தினம் தினம் இப்படியே.. அம்மைவைப் போல. 13-14 வயசிலேயே, குழந்தைத்தனம் துறந்து. ரயிலும் ரயில் சார்ந்த இடமும்..என்ன தினையோ? என்ன வாழ்வோ? அரசாங்கத்தின் கண்களுக்கும், கணக்கெடுப்புகளுக்கும் வராமல்.. பெயரில்லாத சமூகத்தை சார்ந்து.. "அரசை விடு. சமூகத்தில நீயும் தான் ஒருத்தன். நீ என்ன பண்ண போறே? நீ போடுற ஒரு ரூவா காசுல இவ life மாற போவுதா? அந்த ஒரு ரூவா இந்த குழந்தைக்கு எந்த விதத்தில் போய் சேருகிறது? இவ அம்மா இவளை வைத்து சுரண்ட இல்ல செய்கிறாள்? விதௌட்ல வரவள ரயில் போலீசு சும்மா எப்படி விடும்? அவ கிட்டயும் இல்லே காசு புடுங்குவாங்க? இங்க யாரு யாரு கிட்டே புடுங்கறாங்க? மனசு சூறாவளிஆனது.
"காசு குடு அண்ணா"
ஒரு பெரிய கூட்டம் வாசல் நோக்கி நகர ஆரம்பித்தது. மாம்பலம்; வரப் போவுதா?
காசு குடு அண்ணா. பிஞ்சு முழங்கை சுரண்டியது. அது வரை சுழற்றி அடித்த உணர்ச்சிகள் இன்னும் அதிகம் ஆயின - இயலாமை, கோபம், கழிவிரக்கம், துக்கம்..
தப்பி ஓடு தப்பி ஓடு. ஊளை இட்டது மனம்.
எங்கே போக? எங்கே போவே? அதே மனதின் வேறு ஒரு குரல்.
மாம்பலம் ரயிலடியின் மஞ்சள் போர்டு தெரிந்தது.
சரேலென திரும்பினேன்.
கூட்டத்துடன் ரயில் விட்டு இறங்கியதும் மனசு லேசானது. காற்றாய் இருந்தது.
என்னை சுற்றி உள்ளவர்கள் ஆவென பார்ப்பது முதுகின் பக்கம் உணர்ந்தேன்..
இறங்கும் முன் சின்ன குட்டியின் பாத்திரத்தில் போட்டது முழுசாய் ஒரு 500!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment