Saturday, July 30, 2011

ஆடி அமாவாசை

சாயங்கால வெய்யில் சுள்ளென்று இருந்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தில் போக்குவரத்து இரைச்சலாக.

அப்பா என்ன சொல்கிறார் என்பதை கேட்க பக்கத்திலேயே இருந்தும் கூட, கூர்ந்து கேட்காவிட்டால் வார்த்தையை தொலைக்கும் அபாயம் இருந்தது. அப்பா பேச்செடுத்தார்.

"ஏலே. என்ன தான்லே முடிவு பண்ணிருக்க?"

"அதான் சொன்னேனேபா. ஆரம்பத்திலேர்ந்தே அதான் சொல்றேன். என்னோட முடிவுல ஒரு மாற்றமும் இல்லை. உங்க பதிலுக்கு தான் இவ்ளோ நாளா காத்திருக்கோம்."

"ஏலே. ஆச்சி ஒத்துக்காதுலே. நீ பாட்டுக்கு கோட்டிக்காரன் கணக்கா எல்லார் முன்னையும் போட்டு உடைச்சிட்டீல. பக்குவமா பேசி இருக்கணும்லா. இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சிட்டுல. "

" ..."

"ஆச்சி உன்கிட்ட பேசி ஒரு வாரம் ஆச்சில. உனக்கேன்னலே. நீ உன்பாட்டுக்கு வருசத்துக்கு ஒரு வாரம் வரே. நானில்ல இங்கன இவுக கூட இருக்கணும். பேசிப் பேசியே புண்ணாக்கிடுவாலே.நாலு வருஷம் மேல்படிப்பு படிக்கேன்னு போயிட்டு, போன சோலியதான பாக்கணும். எவளோ ஒரு கோட்டிச் சிறுக்கிய பாத்து பல்லிழிச்சு அவளதேன் கட்டுவேங்காம்னு எதிர் வீட்டுக்காரிட்ட புலம்புதால."

மத்தவுகளுக்கு என்னாலே சொல்லுவேன். இப்படி பண்ணிப்பிட்டியேலே? வந்து ஆற அமர ஆச்சி மனசறிஞ்சு மெதுவா, பக்குவமா சொல்லி இருக்கணும்ல."

அப்பாவின் ஆதங்கம் புரிந்தது. ஆற்றில் அவ்வளவாக நீரோட்டம் இல்லை. எருமைகளும் சிறுவர்களும் ஆற்றில் ஆடிக்கொண்டிருந்தனர். தூரே ஆற்றின் ஓரத்து மண்டபத்தில் ஒரு முதியவர் வேட்டி காய வைத்துக்கொண்டிருந்தார்.

வெற்றிச் செல்வி மனதில் வந்து போனாள். அவள் வாசம் கும்மென்று நினைத்தாலே என்ன என்னவோ செய்தது.
"செல்லம். எங்க வீட்டில ஒரு மாதிரி பேசி சமாளிச்சு சம்மதம் வாங்கிட்டேன்டா . அப்பாதான் முதல்ல முரண்டு புடிச்சார். அப்புறமா ஓகே சொல்லிட்டார். நீயும் உங்க வீட்டில பேசிடுடா. ரொம்ப நாளைக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. முப்பது நாள் ஆனா பக்கு பக்குன்னு இருக்குடா. ஊருக்கு போயிட்டு மறக்காம மெசேஜ் அனுப்புடா. உம்மா உம்மா..............."

"சங்கர் ... சங்கர். ஏலே உன்னதான்."

"சொல்லுங்கப்பா."

"அவுக என்ன ஆளுகன்னு சொன்ன?"

........ சொன்னேன்.

"ஏலே. போன லீவுல உங்க ஆபீஸ் குரூப்பு கூட குத்தாலம் பாக்க வந்தப்ப இந்த பிள்ளையும் இருந்திச்சில்ல?"

அப்பா என்பதை விடவும் எனது நண்பர் என்றே சொல்லலாம். மிக மிக பக்குவமானவர். நிதானம்+ அமைதி =அப்பா. கூட்டு குடும்பமானாலும் அவரவர் விருப்பங்களைக் குறிப்பறிந்து செய்வார். வீட்டில் ஆச்சிக்கு அப்புறம் அவர் சொல்லுக்கு மறு சொல் இல்லை.

"ஆமாப்பா. அம்மா, ஆச்சி கூட எல்லாம் போட்டோ எடுத்திச்சில. நெட்டையா, ஒல்லியா ... அம்மைக்கு கூட டீ எல்லாம் போட்டு கொடுத்திச்சில.. அதேன்."

"நீ வெச்சிருக்கிற போட்டோ ல வேற மாதிரி இருந்திச்சா.. அதாம்லே ஐயம்...."

ஞனஞனஞனஞனஞனஞனஞன என பெரும் சத்தம் வந்தது.

"அப்பா. ஓரமா வா. மேல எங்கனயாச்சும் எத்திற போவுறான்"

"சரில. அவுக வீட்டில பேசலாம். நம்ம ஆளுக யாரை எல்லாம் கூப்பிட்டுக்கலாம்?"

சரியாக கேட்கவில்லை. ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"கேக்கல அப்பா"

திரும்பவும் ஒரு முறை சொன்னார்.

இரைந்தேன். "ரமா கிட்டயும் கேட்டுக்கலாம்".

ஞனஞனஞனஞனஞனஞனஞன.

"யாரு?"

ரமா. ரமா! ரமா ஆஆஆ "

ஞனஞனஞனஞனஞனஞனஞன சத்தம் கடந்து சட்டென நின்றது. திரும்ப அப்பாவை பார்த்தேன். ஒரு மாதிரி முனிசிபாலிட்டி கொசு வண்டிப் புகை மாதிரி அடர்ந்த புகை நடுவே நின்றுக் கொண்டிருந்தார்.

"ஏண்ணா. ஏண்ணா. எழுந்திரிங்கோ. இன்னக்கி ஆடி அமாவாசை. சாஸ்திரிகள் வந்திடுவார். நேரமாச்சு. எழுந்திரிங்கோ. அலாரம் நான் தான் அணைச்சேன். ஜெய் தூங்கட்டும்." - ரமா. பத்து வருடமாக என் மனைவி!

கனவுக்கும் நனவுக்கும் இடையே ஒரு திரிசங்கு கணத்தில் தோன்றியது. ஏதோ ஒரு உலகில், சங்கரும் வெற்றிசெல்வியும் கல்யாணம் செய்து, அவர்கள் தாம்பத்திய வாழ்வில் இதே போல் கனவில் ரமாவோ அல்லது வேறு எதோ பெயருடனோ நான் வரவும் கூடும்.

கனவோ காட்சியோ, காண்பவர்களுக்கு மட்டுமே அது நிஜம். நாமும் தினம் தினம், நமக்கே நமக்காய் நமது பிரபஞ்சத்தை தோற்றுவித்து, மாற்றி அமைத்து, தெரிந்தோ தெரியாமலோ அழித்தும் விடுகிறோம். நமக்கு நாமே பிரம்மா, விஷ்ணு, சிவன். அஹம் பிரம்மாஸ்மி.

No comments:

Post a Comment