Tuesday, November 24, 2015

T2

"டாக்டர்  கிரி"
"டாக்டர்  கிரி"


என் பெயர் எல்லா இடத்திலும் அசரீரி மாதிரி ஒலித்துக்கொண்டிருந்த போது தான் கண் முழித்தேன். 

எங்கே இருக்கிறேன்?

தூக்கத்திலுருந்த போதும் கையில் விழாமல் இருந்த கை பேசியில் பல மெசேஜ்கள் .

ஐயோ! நேரம் போனதே தெரியாமல் தூங்கியே போயிருக்கேன்  என்று உரைத்தது.

மெதுவே பிரக்ஞை வந்தது.

நான் தில்லி டி 2 விமான நிலையத்தின் லவுஞ்சில் விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் தூங்கிப்போய் தொலைந்திருக்கிறேன்.

அட! இந்த களேபரத்தில் என்னைப்  பற்றி சொல்லவில்லையல்லவா? நான் டாக்டர் கிரி. உலகக் குடிமகன். பேராசிரியர்.விஞ்ஞானி. ரெண்டு மூணு டாக்டறேட்டும், உலகம் முழுவதும் பல் வேறு பல்கலைகழகங்களில் உரை ஆற்றி வரும் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஊரு விட்டு ஊரு ஓடிக் கொண்டே இருக்கும் பிழைப்பு.  இப்போதைக்கு அவ்வளவுதான்.

அனைத்து மின்னணு உபகரணங்களையும் வாரி சுருட்டி பையில் அடைத்து, எழுந்த போது சுளீர் என முட்டியில் வலி எடுத்தது.

  *** arthritis.

இப்போது லவுஞ்ச் சேவகனும் வந்தான். "டாக்டர் கிரி. உடனே நீங்கள் விமானத்திற்க்கு செல்ல வேண்டும். உங்களைத்  தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கேட்டுக்கு சென்றடைய ரொம்ப தூரம் போகணும். உடனே கிளம்புங்கள். நானும் வாக்கி டாக்கியில் உங்கள் வருகை குறித்து சொல்லி விடுகிறேன்.

அந்த பறந்து விரிந்த டி2 டெர்மினலில்  என்னுடைய விமானம் காத்திருக்கும் வாசல் நோக்கி ஓட்டமெடுக்க வேண்டும்.

அப்போது தான் அவளைப் பார்த்தேன்.


பல கலரில் சாயம் பூசிய தலைமுடியை குதிரை வால் கொண்டையை போட்டிருந்தாள் . அதில் செருகி வைத்திருந்த ஒரு வெய்யில் கண்ணாடி. நாவல் பழ உதட்டுச் சாயம். கையில்லா சட்டையில்  கை முழுவதும் பல நிற வண்ணத்தில் காளியின் 3டி டாட்டூ. சிறுத்தை பிரிண்டில் இறுக்கமாக கால்சட்டை. ஸ்போர்ட்ஸ் காலணிகள். பல நிறத்தில் ஒரு சிறிய கைப்பை.  பளீர் நிறம். உயரம். இளமை.

அவளும் என் கூடவே வந்தாள் . 

"you are also late for the flight? we gotta rush."
 

ஆமாம் என்று தலை அசைத்தேன். வேகமாய் நடக்க முயற்சித்தேன்.

நீண்ட கால்கள் ஒரு கவிதை போல ஒரு fluidity உடன் மிதந்து செல்வது போல் அவள் நடந்தாள் . ஓட்டக்காரியாய் இருப்பாள் போல!

அவளைப் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாய் செல்ல விழைந்தேன். கால் முட்டியில் வலி சுளீர் சுளீர் என வெட்டி இழுத்தது. வலியில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது.

"அம்மா" என என்னையும் மீறி முனகல் வெளி வந்தது.

அவள் டக்கென்று திரும்பிப்பார்த்தாள். அவள் பார்வைக்கு நான் வியர்த்து, விறுவிறுத்து முகம் சிவந்து, ஒரு மாதிரி முன்னோக்கி மடங்கி நடந்து வந்தவனாய் இருந்திருப்பேன். மூக்குக் கண்ணாடி நிஜமாகவே மூக்கின் நுனியில் இருந்தது.
"do you need help?"

ஆமாம் என்று தலை அசைத்தேன். எனது கைகள் அனிச்சையாக எனது முட்டியை பிடிதுக்கொண்டிருந்தன.  அவளாகவே என்னுடைய லேப்டாப் பையை வாங்கிக்கொண்டாள்.

"will you be able to walk?" ஆமாம் என்பதாய் தலை அசைத்தேன்.இப்போது நாங்கள் இருவரும் ஓட்டமும் நடையுமாக விரைந்தோம். முட்டி வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் வேகமாக கூட நடக்க முடிந்தது. 
எனது லேப்டாப் பையிலிருந்த விசிட்டிங் கார்டைப்பார்த்து சொன்னாள் .


"wow! an international professor with so many degrees!"
 

:)
 

இன்னும் 450 மீட்டர் தூரம் தாண்டினால் தான் எங்கள் விமானத்தில் ஏற வேண்டிய ஏரோபிரிட்ஜ் வாசல் வரும். டிரவலடேரிலும் நாங்கள் ஓட்டமும் நடையுமாகவே விரைந்தோம். வழியால் வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. 

"what are you researching currently?"

நான் இப்போது paranormal பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நமது பூமியில் மனித உருவில் இருக்கும் வேற்றுலக வாசிகள் பற்றிய ஆராய்ச்சி. (மேல்மூச்சு வாங்கியது) தேவர்கள், அசுரர்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். எல்லா மத நூல்களிலும் அவை பற்றிய குறிப்புகள் ஏராளமாய் இருக்கின்றன. (மூச்சு) அவர்களும் நம்மிடையே மனிதர்கள் போன்ற உருவில், மற்ற மனிதர்களை அவர்கள் உபயோகித்திற்கு பயன்படுத்திக்கொண்டு (மூச்சு) நம்மிடையே இருக்கின்றனர். (மூச்சு) பெரும் பகுதி ஆராய்ச்சி முடிந்து விட்டது. (மூச்சு) ஆராய்ச்சியின் பொருட்டு தில்லி வந்தேன். (மூச்சு) எல்லாம் உங்கள் கையில் உள்ள லேப்டாபில் தான் இருக்கு (மூச்சு)

அவள் இதை நம்பவில்லை என்பது போல் ஒரு அலட்சிய புன்னகை பூத்தாள் . வேறு எதுவோ சொல்லவோ கேட்கவோ வந்தது போல் யோசனையான ஒரு முக பாவம் வந்தது. மாசு மருவற்ற முகம்.

"இட்ஸ் கெடடிங் லேட் . ப்ளீஸ் ஹர்ரியப்."

அவள் வேகம் பிடித்தாள் . அவள் பின்னே ஓடிக்கொண்டு நான். 

கடைசியாக எப்போது ஓடினேன். 10 அல்லது 15 வருடம் முன்பு. 

ராப்பகலாய் ஆராய்ச்சி. பல ஊர் சாப்பாடு. எப்போதும் குறைந்த தூக்கம். பெரும் தொந்தி ஒன்றும் நான் சேர்த்த சொத்து. 

இதோ. இன்னும் 4 வாசல்கள் தாண்டினால் எங்கள் விமானத்தின் வாசல் வந்து விடும்.

மூச்சு பெரிதாய் இரைந்தது. விலாப்பக்கம் வலி எடுத்தது. நுரை ஈரல் இந்த மாதிரி என்றும் வேலை செய்ததில்லை. ஏசி குளிரையும் மீறி வியர்வை வழிந்தது. கால்கள் களைத்துப்  போய்  நில்லேன் நில்லேன் என்று கெஞ்சியது.

அலை பேசி மறுபடியும் அழைத்தது. last and final boarding call! இன்னும் மூன்று கேட்டுகள் தான். 

அவள் எனக்கு முன்னே 20 அடி தொலைவில் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் pony tail ஒரு ரிதத்தில் மேலும் கீழும் குதித்தது. சந்தேகமேயில்லை. ஓட்டக்காரியே தான். என்னுடைய லேப்டாப் பூணூல் போல தோளின்  குறுக்கே அணிந்திருந்தாள். 

நெஞ்சு வலித்தது. கால்கள் கெஞ்சின. மூச்சு எரிந்தது. வியர்வை வழிந்து கண்ணாடியில் இறங்கியதால் பார்வை கலங்கலாய் தெரிந்தது. வியர்வை தொப்பலில் நான். ஓடு . ஓடு .

இன்னும் ரெண்டே கேட்டுகள். சுமார் நூறடி தூரம்?

ஐயோ. அவள் முதல் கேட்டிலேயே திரும்பிவிட்டாள்!

எண் கணக்கில் தப்பாகி விட்டளோ ? அந்த கேட்டிலிருந்து எந்த ஒரு விமானமும் புறப்படுவதை தெரியவில்லை.

அட! அவள் பெயர் கூட கேட்டு வைக்கவில்லையே! 

ஹலோ !! என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"ஹலோ! ஹலோ! "
இதோ ! அவள் நுழைந்த கேட்டில் நானும் நுழைந்து விட்டேன். 

சிப்பந்திகள் யாரும் இல்லாமல் காலியாஇருந்தது. 

எரோப்ரிட்ஜ் பாசேஜில் ஓடிக்கொண்டிருக்கிறேன். 50 அடி தொலைவில் அவள் வேகமாய் ஓடி கொண்டிருக்கிறாள். ஒரு வளைவில் திரும்புகிறாள்.

நெஞ்சு எரிந்தது. வாயில் ஒரு உலோக சுவையுடன் எச்சில் ஊறி வழிந்தது. வியர்வை வெள்ளமாக. 

இதோ வளைவில் நானும் திரும்புகிறேன்.

ரொம்ப ஷார்பாய் திரும்பியது அந்த  வளைவு.

கால் இடறி குப்புற விழுகிறேன்.என் கண்களில் இருந்து கண்ணாடி முன்னே  எகிறியது.

அப்போது தான் பார்த்தேன். 

அவள் நீண்ட இறக்கைகள் அடித்த வண்ணம் எரோப்ரிட்ஜின் முடிவில் கருநீல வானத்தின் பின்னணியில் பறந்து கொண்டிருந்தாள். என்னுடைய லேப்டாப் அவள் காலில் சுற்றிக்கொண்டிருந்தது.

கண்கள் சுத்தமாய் இருண்டு போனதும், முகம் தரையில் மோதி சிதறும் சத்தமும் தான் நான் கடைசியாய் உணர்ந்தது.
.

No comments:

Post a Comment